தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. 'போட்டித் தேர்வுக் களஞ்சியம்'. இந்திய வரலாறு பண்பாடு ஆகியவற்றைப் பற்றி போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை அறியப் பயன்படும் வகையிலும் அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை அங்கங்கே தேடிக்கொண்டு இருக்காமல், ஒரே இடத்தில் தொகுத்து இந்தப் புத்தகத்திலேயே அனைத்து விஷயங்களும் வரிசைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இதில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, சிந்து சமவெளி நாகரிகம், பண்டைத் தமிழகம், பௌத்தம், சமணம், பேரரசுகளின் தொடர்ச்சி, டெல்லி மொகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, நேரு யுகம், இந்திரா யுகம் என அனைத்து விஷயங்களும் சின்னஞ்சிறு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்பாட்டுப் பகுதியிலும் இந்து மத நூல்களில் தொடங்கி, பக்தி இயக்கம், ராமாயணம், மகாபாரதம், தமிழர் பாரம்பரியம், கலாசாரம், சங்கத் தமிழ், தமிழ் நூல்கள், தற்கால இலக்கியம், நுண் கலைகள் என அனேக விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுக்கான பொது அறிவுப் பாடத்தில் அடங்கியுள்ள இந்திய வரலாறும் பண்பாடும்' என்ற பிரிவுக்கான இந்த நூல் குரூப்-1 மற்றும் குரூப்-2 முதல் தேர்வுக்கென தேர்வாணையம் வெளியிட்டுள்ள பாடத் திட்டத்திற்கேற்ப எழுதப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுகளில் பொது அறிவுப் பாடத்தில் இடம்பெறும் வரலாறு, பண்பாடு தொடர்பான கேள்விகளுக்கு சிறந்த முறையில் விடையளிக்க 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதைத் தேர்வர்கள் நன்கு அறிவர். ஆனால் அந்தப் பாடங்களில் எந்தப் பாடத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப் வேண்டும் என்பதும், ஒவ்வொரு பாடத்தையும் எந்த அளவுக்கு ஆழமாகப் படித்துக் குறிப்புகள் எடுக்க வேண்டும் என்பதையும் தேர்வு வினாக்களை அலசிப் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.
அப்படி அலசிப் பார்க்கும் பொழுது பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் எல்லாத் தகவல்களும் போட்டித் தேர்வு நோக்கில் பயன்படுவது இல்லை என்றும், சில சமயங்களில் பள்ளிப் பாடப் புத்தகத்துக்கு வெளியேயும் கேள்விகள் கேட்கப்படுகின்றன என்பதையும் தெளிவாக உணரலாம். அப்படி ஒரு வினாத்தாள் அலசலைத் தேர்வர்களுக்காக மேற்கொண்டு தேர்வு நோக்கில் அதி முக்கியமாகத் தேவைப்படும் தகவல்களை எல்லாம் பள்ளிப் பாட நூல்களில் இருந்தும் வேறு பல மூலங்களிலிருந்தும் தொகுத்து இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாறு, பண்பாடு, பாடங்களில் முந்தைய வருடத் தேர்வுகளில் கேட்கப்பட்ட மாதிரி வினாக்களையும், ஒரிஜினல் வினாத்தாளிலிருந்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளையும் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சமச்சீர் முப்பருவக் கல்வி பாட நூல்களை அடிப்படையாகக் கொண்ட TN-TET வினாத்தாள்களையும் கொண்டு அமைக்கப்பட்ட ஆறு பயிற்சித் தேர்வுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
TNPSC தேர்வில் பொதுத் தமிழ் பாடத்தைத் தேர்வு செய்யாமல் பொது ஆங்கிலப் பாடத்தைத் தேர்வு செய்பவர்கள் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளில் தமிழ்நாடு வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்படும் தமிழ் இலக்கியம், பண்பாடு தொடர்பான வினாக்களுக்கு விடையளிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். அந்த மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நூலில் பல இடங்களில் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் விளக்கப் பட்டுள்ளதோடு இந்தியப் பண்பாடு என்ற பாடத்தில் தமிழ் இலக்கிய வரலாறு விரிவாகத் தரப்பட்டுள்ளது.
இந்திய வரலாறு, பண்பாடு தொடர்பான எல்லாத் தகவல்களையும் இந்த நூலில் அடக்கிவிட முடியாது என்ற போதிலும், இந்நூலில் இடம் பெற்றுள்ள எல்லாத் தகவல்களும் தேர்வு நோக்கில் அதிமுக்கியமானவை என்று அழுத்திச் சொல்லலாம். கற்றிடுங்கள், வென்றிடுங்கள்!
No comments:
Post a Comment